கருத்துத் திருட்டு என்பது தற்போது கல்வித் துறையில், குறிப்பாக ஆய்வு மாணவர்களிடத்தில் அதிகரித்து வருவது பல பல்கலைக்கழகங்களில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இப்போது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக் காரணம், எந்த ஓர் அறிவியல் அல்லது ஆய்வுத் தகவல்களையும் இணையதளத்தின் மூலம் எளிதில் தேடியெடுக்க, படியெடுக்க முடிகின்றது என்பதுதான்.
இணையதளத்திலிருந்து அப்படியே பல பக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அதை ஆய்வுக் கட்டுரையுடன் இணைத்துவிடும் தந்திரங்களைப் பல ஆய்வு மாணவர்கள் கையாளுகிறார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்களே மிகவும் வேதனைப்படுவதும், இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திணறுவதும், கருத்தரங்க மேடைகளில் புலம்புவதும் வாடிக்கையாகிவிட்டது.
அண்மையில், இத்தகைய கருத்துத் திருட்டு விவகாரத்தில், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர். ராவ் ஒப்புதல் அளித்த ஆய்வுக் கட்டுரை சிக்கியது. அந்த ஆய்வுக் கட்டுரையின் சில தகவல்கள் ஏற்கெனவே ஓர் அறிவியல் இதழில் 2010-ம் ஆண்டிலேயே வந்திருப்பதை எடுத்துக்காட்டிய பிறகு, அந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.
அந்த இருவரில் ஒருவர், ""கருத்தை எடுத்துக்கொண்டதில் தவறில்லை, அதன் எழுத்தை மாற்றாமல் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பயன்படுத்தியதுதான் தவறு'' என்றும்கூட சொல்லியிருக்கிறார். முன்பெல்லாம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும்போது, ஆய்வுக்கு உதவியவர்கள், உதவிய நூல்கள் பட்டியலை மாணவர்கள் இணைப்பார்கள்.
இந்தப் பட்டியல் மிகவும் நீளமாகவும் பல பக்கங்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர்கள் பட்டியலில் குறிப்பிடும் நூல்களைப் புரட்டியாவது பார்த்திருக்கிறார்களா என்பதை பேராசிரியர்கள் நேர்காணலின்போது, அந்த நூல் தொடர்பான கேள்விகளைக் கேட்டு சோதிப்பதுண்டு. ஆனால், காலப்போக்கில் எல்லா நடைமுறைகளும் மாறிவிட்டன.
ஆய்வுக் கட்டுரையின் மையக் கருத்துத் தொகுப்புரையை மட்டுமே படித்துவிட்டு, ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்புதல் வழங்கும் பேராசிரியர்கள் பெருகிவிட்டதும், இத்தகைய துணிச்சலான கருத்துத் திருட்டுக்கு வழிவகுத்துவிட்டது எனலாம். கருத்துகளை எடுத்துக் கையாளுதல், மேற்கோள் காட்டுதல், அல்லது கருத்துகளை மேலும் விரிவும் ஆழமும் கொண்டதாக விவாதித்தல் எல்லாமும் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
இது இலக்கியத்தில் நடைபெறும்போது இதுபற்றி யாரும் அதிகம் கவலைப்படப்போவதில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் கருத்தை, கவிஞர் கண்ணதாசன், "மாநிலம் எல்லாமும் நம் இல்லமே, மக்கள் நம் சொந்தமே' என்று பாடல் வரியாக மாற்றினால், அதை யாரும் கருத்துத் திருட்டு என்று சொல்லிவிட முடியாது. "காலங்களில் நான் வசந்தம்' என்ற பகவத் கீதை வரிகளை, "காலங்களில் அவள் வசந்தம்' என்று எழுதுவதும், அதற்கும் மேலாக கருத்துச் செறிவு தந்து கவிதையை உயர்த்துவதும் கவிஞரைப் பார்த்து வியக்க வைக்கத்தான் செய்யும்.
இலக்கியத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், அறிவியல் ஆய்வுகளில் இதை ஏற்றுக்கொள்வது இயலாது. ஆய்வு முடிவுகளில் பிறர் கருத்தை ஒப்பீடு செய்யலாமே தவிர, அப்படியே எடுத்தாளவோ அதில் திரிபு செய்து பயன்படுத்துவதோ இயலாது; செய்யவும் கூடாது. இத்தகைய தவறுகளை ஆய்வு மாணவர்கள் செய்வதற்குக் காரணம் கருத்துத் திருட்டு அல்ல, வெறும் விவரணைத் திருட்டு என்றும் சொல்லப்படுகிறது.
எழுதத் தெரியாததும், எழுதுவதில் ஆர்வமின்மையும்தான் இத்தகைய மாணவர்களைக் கருத்துத் திருட்டில் ஈடுபட வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஓர் அறிவியல் கருத்தை எடுத்துச் சொல்லும் மொழிநடை வறட்சியானது, தட்டையான மொழியில் அமைந்த உரைநடை என்பதால் இதை மீண்டும் எழுதுவதற்குப் பதிலாக இதேபோன்று எழுதப்பட்ட, விவரித்துள்ள ஆய்வு ஏடுகளின் மொழியைத் திருடுவதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கின்றதே தவிர, கருத்துத் திருட்டாக அவர்கள் நினைப்பதில்லை.
பாடப்புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி எழுதுவது சரி என்கிற உளவியல் பதிவு, இவ்வாறு அடுத்தவர் ஆய்வு ஏடுகளிலிருந்து கருத்தை அப்படியே எடுத்துக் கொள்வதை ஒரு தவறு என்ற உறுத்தலை அவர்களுக்கு ஏற்படுத்துவதே இல்லை. பாடப் புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பதிலாக எழுதும் கல்வி முறை மாறினால்தான், அடுத்தவர் ஆய்வுக் கட்டுரையிலிருந்து சோம்பேறித்தனத்தால் ஆய்வுப் பக்கங்களை அப்படியே எடுத்தாளும் நிலைமை மாறும். பாடப் புத்தகத்தில் இடம்பெறாத கேள்வி மூலம் கணக்குத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படுவதைப் போல, அறிவியல் பாடங்களையும் மாணவர்கள் தாங்கள் புரிந்து கொண்டதைத் தங்கள் மொழியில் எழுதும் வாய்ப்புகளையும் அதற்கான மதிப்பெண்களையும் அளிக்க வேண்டும். இந்தக் கெடுதலிலும் ஒரு நன்மை.
ஓர் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக ஒரு முறைக்குப் பல முறை படிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பேராசிரியர்கள் ஆளாகியிருக்கிறார்கள். பல முனைவர் பட்ட ஆய்வுகள் எந்தவிதப் படிப்போ, உழைப்போ இல்லாமல் செய்யப்படுவதும், அவற்றை நமது பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துப் பட்டம் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொடுப்பதற்கென்றே தரகர்கள் வீதிதோறும் வலம் வரும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்கிற நிலைமைக்கு யார் காரணம்?
இந்தப் பிரச்னையில் மாணவர்களைக் குறை கூறுவதைவிட, பல்கலைக்கழகங்களின் தரம் குறைந்து வருவதைப் பற்றித்தான் நாம் கவலைப்பட்டாக வேண்டும். நோட்டுப் புத்தகங்களை விநியோகம் செய்வதுபோல முனைவர் பட்டங்களை வாரி வழங்காமல், முறையான வழிகாட்டுதலும், கண்காணிப்பும் உறுதி செய்யப்பட்டு ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.