Thursday 15 September 2011

சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்

சீரிய நிர்வாகத்துக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் குஜராத் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையொன்று தெரிவிப்பதாக புதன்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.



அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை, மன்ற உறுப்பினர்களுக்காக இந்திய அரசியல் சூழல் குறித்து 94 பக்க அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளது. 

உறுப்பினர்களின் கவனத்துக்காக மட்டும் தயாரிக்கப்படும் இது போன்ற குறிப்பறிக்கைகள் வெளியில் உள்ள எவருக்கும் தரப்படுவதில்லை. ஆயினும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இந்த அறிக்கை அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது.இந்த அறிக்கையில் கூறியிருப்பது:
செயலாற்றல் மிக்க நிர்வாகத்துக்கு குஜராத் சிறந்த உதாரணமாக உள்ளது. முதல்வர் நரேந்திர மோடி ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு நிர்வாகத்தில் தாமதத்தை ஒழிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார். 

தனது மாநிலத்தில் நவீன சாலைகள், மின் உற்பத்திக் கட்டமைப்பு ஆகியவற்றில் ஏராளமான முதலீடுகள் வரும் வகையில் நிர்வாகம் செலுத்தி வருகிறார். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக 11 சதவீதமாக உள்ளது. 

இது இந்தியாவின் பொருளாதாரத்தையே செலுத்துகிறது.ஜெனரல் மோட்டார்ஸ், மிட்ஸýபிஷி போன்ற சர்வதேச நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன.இந்திய மக்கள்தொகையில் 5 சதவீதமுள்ள குஜராத், நாட்டின் ஏற்றுமதிகளில் 20 சதவீதப் பங்கை அளிக்கிறது.

மோடி மகிழ்ச்சி: 

சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணமாக உள்ளது என்று கூறும் அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை வெளியானது குறித்து முதல்வர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.சமூக இணையதளமான டுவிட்டரில் அவர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

"இந்த அறிக்கை 6 கோடி குஜராத்திகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்; குஜராத் வெல்க' என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் பதவிக்கு மோடி? 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையைச் சேர்ந்த மோடி பிரதமர் பதவி வேட்பாளராக இருக்கக் கூடிய பலமான வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.



பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இப்போதைய அரசு ஆளாகியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட பாஜக நல்ல நிலையில் உள்ளது என்கிறது அவ்வறிக்கை. 

இரண்டாவது பிகார்: குஜராத்துக்கு அடுத்தபடியாக பிகார் மாநிலத்தில் நல்ல நிர்வாகம் நடப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முதல்வர் நிதீஷ் குமார் சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டி நல்ல நிர்வாகத்தை அளித்து வருகிறார்



பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துப் பெரும் வெற்றிபெற்ற பின்பு, உள்கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி சாதாரண மக்களுக்கு நேரடிப் பயன்பாடுள்ள மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ஜாதி அரசியலை முற்றிலும் புறக்கணித்துவிட்டார்.

பயங்கரவாதம்: 

பயங்கரவாதத்தைப் பொருத்தவரை, அரசு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், முழுக்கவும் உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் இந்தியாவுக்கு இருக்கிறது. பாகிஸ்தான் மீது பழி சுமத்தி வந்தாலும், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்திலிருந்து தோன்றியது எனக்கூடிய இந்திய முஜாஹிதீன் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக உள்ளது.

 ஹசாரே போராட்டம் குறித்து: ஹசாரே போராட்டத்தை இந்திய அரசு கையாண்ட விதம் ஜனநாயகமற்றதாகும். அரசின் கையாலாகாத்தனத்தையே இது காட்டியது. ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கியவர்கள் கூட அரசு நடவடிக்கைக்குப் பின்னர் அவரது இயக்கத்துக்குப் பின்துணை கொடுக்க முன்வந்தனர் என்று அவ்வறிக்கை கூறியுள்ளது.

No comments:

Post a Comment