தமிழகத்தில்
உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில்,
10 மாநகராட்சிகள்,
98 நகராட்சி,
50 மூன்றாம் நிலை நகராட்சி,
561 டவுன் பஞ்சாயத்து உள்ளன.
அதே போல்,
29 மாவட்ட பஞ்சாயத்து,
385 பஞ்சாயத்து யூனியன்,
12,618 கிராம பஞ்சாயத்து உள்ளன.
இதன் பதவி காலம் அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்க வேண்டும்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் நேற்று இரவு அறிவித்தார். அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மேயர், நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் உள்பட மொத்தம்
1,32,401 உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மொத்த வாக்காளர்கள்
4 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரத்து 379 பேர்.
இதில்
ஆண்கள் 2 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரத்து 838 பேர்,
பெண்கள் 2 கோடியே 30 லட்சத்து 37 ஆயிரத்து 930 பேர்.
இதர வாக்காளர்
611 பேர்.
முதன் முதலாக மாநகராட்சி, நகராட்சி,
பேரூராட்சி பகுதிகளில் 80,500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஊரக பகுதிகளில் 2 லட்சத்து 39 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 86,104 வாக்குச்சாவடிகளில் ஓட்டு பதிவு நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாள். மனுக்கள் பரிசீலனை 30-ம் தேதி நடக்கும் திருச்சி மாநகராட்சிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3-ம் தேதி கடைசி நாள்.
முதல் கட்டத்தில்
9 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேரூராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 17-ம் தேதி ஓட்டுப்பதிவும், 2ம் கட்டத்தில் 65 நகராட்சி, 270 பேரூராட்சி, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 19-ம் தேதி ஓட்டுப்பதிவும் நடக்கும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 21-ம் தேதி நடக்கிறது.
உள்ளாட்சிகளின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி 25-ம் தேதி நடக்கும். நேரடி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பார்கள். அதன்பின்னர், மாநகராட்சி துணை மேயர், நகராட்சி துணை தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 29-ம் தேதி நடக்கும். ஏற்கனவே வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இவர்களை தேர்ந்தெடுப்பர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு நலத்திட்டங்கள், இலவச திட்டங்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசு வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை கொண்டு வரப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள், பிரச்னைக்குரிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளாக மாநகராட்சிகளில் கமிஷனர்களும், மாவட்டங்களில் கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வேட்புமனுக்களை பெறுவதற்கு தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அமைதியாக, நியாயமாக நடப்பதை உறுதி செய்ய மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
. உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு முறை என்பதால், ஓட்டு பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.