Saturday 27 August 2011

நானோ தொழில்நுட்பம் (Nano Technology)

அறிவியல் துறைக்கு சமீபத்திய தொழில்நுட்ப வரவு நானோ. நானோ என்றால் மிகச்சிறிய என்று பொருள்.


நானோ(NANO) தொழில்நுட்பம் என்பதை வரையறுப்பதனால், ஒரு கருவி அல்லது பொருளின் வடிவம், தொகுப்பு, பண்புரு போன்றவற்றை உள்ளடக்கிய மிகச்சிறிய அமைப்பைக் கொண்ட தொழில்நுட்பம். அதாவது ஒரு பெரிய கருவியின் பயன்பாட்டை, அக்கருவியின் சிறிய உருவத்தின் மூலம் மிக எளிதாகவும், துல்லியமாகவும் செய்வது எனக் கொள்ளலாம்.
நானோ தொழில்நுட்பம் என்ற வார்த்தை 1980களில் எரிக் டிரக்ஸ்லர் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. மாலிக்யூலர் எனப்படும் மூலக்கூறுகளின் அடிப்படையில் இத்தொழில்நுட்பம் செயல்படுகிறது. நானோ தொழில்நுட்பம் நான்கு படிநிலைகளை(தலைமுறை)க் கொண்டது.

பாஸிவ் நானோஸ்ட்ரக்சர்ஸ்(Passive Nanostructures), ஆக்டிவ் நானோ ஸ்டரக்சர்ஸ்(Active Nanostructures), சிஸ்டம்ஸ் ஆப் நானோசிஸ்டம்ஸ்(Systems of Nanosystems), மாலிக்யூலர் நானோசிஸ்டம்ஸ்(Molecular Nanosystems).
இதில் பாஸிவ் நானோஸ்டரக்சர் முதல் தலைமுறையைச் சார்ந்தது. இது நானோ தொழில்நுட்பத்தின் துவக்க கட்டம் எனலாம். அதாவது கருவிகளைப் பயன்படுத்துவது. கடந்த 2000ம் ஆண்டில் இக்காலகட்டம். 2005ல் இரண்டாம் தலைமுறையான ஆக்டிவ் நானோ ஸ்டிரக்சர்; பல பயன்பாடுகளை மேற்கொள்வது. தற்போது சிஸ்டம் ஆப் நானோ சிஸ்டம்ஸ். 2015க்குப் பிறகு மாலிக்யூலர் தலைமுறை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நானோ தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகள் மருத்துவத்துறை
உடலியல் மற்றும் மருத்துவத்துறை நானோ கருவிகள் உடலின் சிறிய உறுப்புகள், செல்களோடும் தொடர்பு கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவத்தில் நானோ தொழில்நுட்பத்தின் மூலம், எந்த உறுப்பின் மீது செயல்படுத்த வேண்டுமோ அதைத் துல்லியமாகத் தேர்வு செய்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். அதிகபட்ச பயன்பாடு, மிகக்குறைந்த பக்கவிளைவு என்பதே இதன் நோக்கம்.

மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பம்
நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பம் இன்னும் ஆய்வுக்கட்டத்தில்தான் உள்ளது. இத்தொழில்நுட்பம் துல்லியமான, மூலக்கூறு அளவிலான கட்டுமானத் தொகுப்புகளின் அடிப்படையில் உற்பத்தி செய்வது தொடர்பானதாகும். கட்டுமானத் தொகுப்புகளில் இயற்கை மூலக்கூறுகளைப் பயன்படுத்துதல், ஆர்கானிக் பைபர், ஆர்கானிக் கிரிஸ்டல்கள் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நவீன கருவிகள், சென்சார்கள்
நானோ அளவுகளின் அடிப்படையில் தயார் செய்யப்படும் கருவிகள், செயல்பாட்டுத்திறன் மிக்கவையாக இருக்கும். மருந்துகள் குறிப்பிட்ட வைரசின் மீது மட்டும் செயல்படுவதை இதற்கு உ<தாரணமாகக் கொள்ளலாம். புகைப்படம் எடுக்க விசை முடுக்கப்பட்ட உடன் அதனைக் கிரகிக்கும் சென்சார் ஒளியை உமிழ்வதும் இதுபோன்றதே. மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பத்துடன் இவை நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன.

மருத்துவ ரோபோக்கள்
மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடு, மருத்துவத்துறையில் நானோ ரோபோக்கள், நானோ மருந்துகள் ஆகும். நானோ ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் மரபணு பிரச்னையை சரி செய்தல், மனிதனின் இயற்கை ஆற்றலை அதிகரித்தல், உடல் உபாதைகளில் இருந்து வலியற்ற நிவாரணம், நோய்களில் இருந்து விரைவாக குணமடைதல் போன்றவை சாத்தியமாகும். இருந்தபோதும், அக்கருவிகள் தாங்களாகவே மனித உடலில் சுயமாக மாற்றங்களை நிகழ்த்த அனுமதிக்கப்பட மாட்டாது. அவை வரைமுறைக்கு உட்படுத்தப்பட்டே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நானோ தொழில்நுட்பத்தின் பயன்கள்
இத்தொழில்நுட்பத்தின் மூலம் அதீத திறன்மிக்க கம்ப்யூட்டர்களை உருவாக்க முடியும். கருவிகளையும் உபகரணங்களையும் தற்போதைய எடையை விட 50 மடங்கு லேசாக, அதேசமயம் தற்போதுள்ள வலிமையோடு தயாரிக்க முடியும். ஜெட் விமானங்கள், ஏவுகணைகள், கார்கள் ஏன் நாற்காலிகள் உட்பட அனைத்தையும், மிகவும் உறுதியானதாக, எடைகுறைவாக, மிகக்குறைந்த செலவில் தயாரிக்க முடியும்.

மாலிக்யூலர் அறுவைசிகிச்சை உபகரணங்கள், கம்ப்யூட்டர்களின் வழிகாட்டுதலுடன் ரத்த ஓட்டத்தில் கலந்து, கேன்சரை உருவாக்கும் செல்களை அழித்தல், மோசமான பாக்டீரியாக்களை எதிர்த்தல், ரத்தக்குழாய் அடைப்பைச் சரி செய்தல், தேவையான பிராண வாயுவை பலவீனமான இடங்களுக்கு பரவச் செய்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும்.

அனைவருக்கும் சிறந்த உடல்நலத்தை வழங்க இது உறுதுணையாக இருக்கும். சின்னம்மை மிக அரிதாகக் காணப்படுவது போன்று, உடல்நலக்குறைவும் மிகஅரிதாகவே இனி இருக்கும். இறந்த செல்களை மாற்றி அமைப்பது கூட சாத்தியமாகும்.

நானோ தொழில்நுட்பத்தின் அபாயம்
மனித குல மேம்பாட்டுக்கு இத்தொழில்நுட்பம் உதவிகரமானதாக இருந்தாலும், இதன் அபாயமான மறுபக்கத்தையும் மறுக்க இயலாது. ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதைப் போலவே, இதன்மூலம் மலிவான, அபாயகரமான ஆயுதங்களையும் தயாரிக்க முடியும். மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பத்தில் ரோபோக்கள், மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவை தாங்களாகவே பெருகிக்கொள்ளக்கூடிய அபாயமும் உண்டு.

எனவே, சுயமாக பிரதி செய்து கொள்ளக்கூடிய நிலை, மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அந்த உற்பத்திக்குத் தேவையான கனிமவளங்கள் சுரண்டப்படக்கூடும்.

நானோ தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் இணைந்திருக்கிறது. ஆனால் இது துவக்கம் மட்டுமே. நானோ தொழில்நுட்பம் உடல்நலம் மற்றும் சூழலியல் பிரச்னைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வுகளில், நானோ தொழில்நுட்பம் எதிர்பாராத விளைவுகளையும் தந்திருப்பது தெரிய வந்துள்ளது. காலுறைகளில் பயன்படுத்தப்படும் சில்வர் நானோபார்ட்டிக்கிள்கள், வியர்வை துர்நாற்றத்தை தடுக்கின்றன. 

அதேசமயம் அவை சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் பதம் பார்க்கின்றன.
நானோ பார்டிக்கிள் மூலம் சுவாசித்த எலியின் மூளை, நுரையீரல்களில் நானோ பார்ட்டிக்கிள்கள் தங்கி விட்டிருக்கின்றன. நானோ டைட்டானியம் டை ஆக்சைடை சுவாசித்த பிராணியின் டி.என்.ஏ.,க்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மனிதனுக்கு இதனால், கேன்சர், இதய நோய் போன்ற பெருநோய்களை உருவாக்கக் காரணியாகலாம். நானோ புரட்சியால் பயன்கள் விளையும் அளவுக்கு, அபாயங்களும் நேரிடும். எனவே நானோ தொடர்பான ஆய்வுகளும், பயன்பாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளுடனே மேற்கொள்ளப்பட வேண்டும். அதுதான் சூழலியல் அபாயங்களைக் குறைக்கும்.

No comments:

Post a Comment