Tuesday 24 July 2012

அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைப்பு

தமிழ்நாட்டில் தற்போது செயல்படும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஐந்தையும் ஒரே நிறுவனமாக வரும் ஆகஸ்ட் முதல் தேதிமுதல் மீண்டும் ஒருங்கிணைக்கத் தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க முடிவு. 

 இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், தற்போது ஒருங்கிணைக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இவர்களால் பயனடைந்த சில கல்லூரி நிறுவனங்கள் மட்டுமேதான்.


 மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும், அண்ணா பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பு பரவலான வரவேற்பு பெறும் என்பதில் ஐயமில்லை.  முந்தைய ஆட்சியின்போது, அண்ணா பல்கலைக்கழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. அது நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் முடிவு என்றும், இணைவுபெற்ற கல்லூரிகளை மேற்பார்வையிடுவது எளிது என்றும் அப்போது சொல்லப்பட்டது.  சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என ஐந்து மண்டலங்களாகப் பிரித்து
ஐந்து துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

 துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். கூடுதலாகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஒரு பல்கலைக்கழகத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பல ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட செலவுகள் மிகமிக அதிகம். ஆனால், தமிழகமும் மாணவர் சமுதாயமும் அடைந்த பயன் என்ன என்று பார்த்தால் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை.  

மண்டல அளவில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம், சிலருக்கு வேலைவாய்ப்பும் பதவியும் கிடைத்தன. அந்தந்த மண்டலத்தில் இடம்பெறும் தொழில்நுட்பக் கல்லூரிகள் புதிய துணைவேந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. சட்டதிட்டங்களை வளைத்துக் குறைவான அடிப்படை வசதிகளுடன் அதிக நன்கொடையும், கட்டணமும் பெற்று லாபமீட்டப் பலரால் முடிந்தது. 

 பருவத் தேர்வுகளை அந்தந்த மண்டலத்தில் உள்ள அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் நடத்தின. இதனால் வினாத்தாள்கள் மாறுபட்டன. கல்வித்தரம் மாறுபட்டது. மதிப்பீடுகள், ஆய்வுமுறைகள், பாடத்திட்டம் எல்லாமும் அந்தந்த துணைவேந்தரின் விருப்பம் சார்ந்ததாக மாறியது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் பலதரப்பட்டதாக மாறும் சூழல் ஏற்பட்டது.  ஐந்து துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டபோதிலும், தமிழகத்தின் மாணவர்கள் அனைவரும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வந்துதான் கலந்தாய்வில் பங்குகொள்ள வேண்டியிருந்தது. ஏன் அந்தந்தப் பல்கலைக்கழகங்களே கலந்தாய்வை நடத்தவில்லை என்ற கேள்விக்கு, மாணவர்களின் நலனுக்காகத்தான் கலந்தாய்வு ஒரே வளாகத்தில் நடத்தப்படுகிறது என்று சொல்லப்பட்டது. 

சுமார் 2.5 லட்சம் மாணவர்களுக்கு ஒரே இடத்தில் கலந்தாய்வு நடத்துவது சாத்தியம் என்றால், இந்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவதும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சாத்தியம்தானே?  தற்போது இந்த ஒருங்கிணைப்பின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் என்ற ஒரே குடையின் கீழ், ஒரே தரத்திலான கல்வியைப் பயிலும் வாய்ப்பு தமிழகம் முழுவதுமான பொறியியல் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. 

இந்தத் தர அங்கீகாரம், உலக அளவில் கல்வி பயில மாணவர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும்போதும், வேலைவாய்ப்புகளிலும் அதிக முக்கியத்துவம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.



  திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படாமல் தேவையற்ற காலதாமதம் நேர்ந்தது. புரொவிஷனல் சர்டிபிகேட் ஓராண்டுக்குப் பிறகு மதிப்பிழக்கும் நிலையில், தாங்கள் தங்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ளப் பட்டச்சான்றிதழ் வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாகக் கூக்குரல் எழுப்பிய பின்னர்தான், பட்டம் வழங்கப்பட்டது. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தலையிட முடியவில்லை. இந்த அவல நிலையை யார் தட்டிக் கேட்பது? இப்படிப் பல குளறுபடிகளைப் பட்டியலிட முடியும். 

 இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கல்வியாளர்கள், 535 பொறியியல் கல்லூரிகளை ஒரே பல்கலைக்கழகம் எப்படிக் கண்காணிக்க முடியும், தேர்வு நடத்த முடியும் என்று கேள்வி கேட்கின்றனர். தற்போது இந்தப் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டாலும், அந்த அலுவலகங்கள் தொடர்ந்து செயல்பட்டு, ஒரு கண்காணிப்பு அமைப்பாக நீடிக்கும் என்பதை ஏனோ இவர்கள் மறந்து விடுகிறார்கள்.  துணைவேந்தர் பதவி இல்லை, துறைத்தலைவர் பதவி இல்லை என்ற மனவருத்தம்தான் பலருக்குப் பெரிதாகத் தெரிகிறது.  

தகவல் தொழில்நுட்பம் உன்னத நிலையில் இருக்கும் இன்றைய சூழலில், 535 கல்லூரிகளை ஒரே பல்கலைக்கழகம் நிர்வகிப்பது சாத்தியம் என்றாலும், கல்லூரிகளின் எண்ணிக்கையை வைத்து மண்டலங்களாகப் பிரிப்பதைக் காட்டிலும், கல்லூரிகளின் தரத்தை மதிப்பிட்டு, ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருப்பதை இந்த நேரத்தில் நாம் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.  பருவமுறைத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்து வரிசைப்படுத்தும்போது, சுமார் 100 கல்லூரிகள் மட்டுமே 65%க்கு அதிகமான தேர்ச்சி உள்ள கல்லூரிகளாக இருக்கின்றன. 

ஆகவே கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை வைத்து, மிகச் சிறந்த கல்லூரிகள், நல்ல கல்லூரிகள், சாதாரண கல்லூரிகள் என்று மூன்றாக வகைப்படுத்தி, மூன்றுவித கல்விக் கட்டணங்கள் அமல்படுத்துவதன் மூலம், ஒரே பல்கலைக்கழகத்தில் இணைவுபெற்ற கல்லூரிகளுக்கிடையே தரத்துக்கான போட்டியை உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.  அப்படிச் செய்தால்மட்டுமே ஒருங்கிணைப்புக்கு அர்த்தம் இருக்கும்!
                                                                                                                      
                                                                                                                      - தினமணி

Monday 16 July 2012

ஆண்களை விட பெண்களுக்கு அறிவு வளர்ச்சி அதிகம் ??

ஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து லண்டனில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
 
இதுவரை அறிவு வளர்ச்சியில் ஆண்களை விட 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன எனவும், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பதற்கு பெண்களின் இந்த வளர்ச்சியே உதாரணம் எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. 
 



 
 
மேலும் இனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.